search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா உள்நாட்டு போர்"

    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 21 பேர் உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

    கிளர்ச்சி படைகள் வசம் உள்ள பெரும்பாலான பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் உள்ள சில நகரங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இதற்காக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கிளர்ச்சி படை ஆதிக்கம் உள்ள இட்லிப் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் அலெப்போ புறநகர்ப்பகுதிகளில் அரசுப் படைகள் நேற்று இடைவிடாமல் வான்தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த உக்கிரமான தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக, மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், அரசுப் படைகள் மற்றும் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 229 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிரியாவில் நடக்கும்  கொடூரமான தாக்குதல் மற்றும் பேரழிவை தடுத்து நிறுத்த வலிமை வாய்ந்த நாடுகள் எதுவும் செய்யவில்லை என ஐநா சபை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.
    பாக்தாத்:

    சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டைநாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வடமேற்கு பகுதியில் அரசு ஆதரவு படைகள் மீது கிளர்ச்சிப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அரசுப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஹமா மாகாணம் காபிர் நபுதா நகரில் நடந்த இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிளர்ச்சிப் படை தரப்பில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

    காபிர் நபுதா நகரை கடந்த 8-ம் தேதி அரசுப் படைகள் கைப்பற்றியது. இதனை மீட்கும் முயற்சியில் தற்போது கிளர்ச்சிப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். #SyriaIssue #Trump #Erdogan
    வாஷிங்டன்:

    சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில்  எஞ்சியுள்ள பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதன் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு சிரியா மற்றும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, துருக்கி இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.


    சிரியாவில் குர்திஷ் படையினர் வசம் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு, இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
    சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #poisonousgasattack
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொள்கிறது. சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் ரஷியாவின் உதவிக்கொண்ட சிரிய அரசு அதுபோன்ற நடவடிக்கையை தொடர்கிறது. பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.  

    இந்த நிலையில் அங்குள்ள அலெப்போ நகரத்தில் வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால், அங்கு 107 பேர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

    இது பற்றி சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறும்போது, ‘‘சுவாச பிரச்சினையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்தது. இந்த வி‌ஷ வாயு தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சொல்லப்படுகிறது. #poisonousgasattack
    சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria
    மாஸ்கோ:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம்மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

    மேலும்,சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தின.

    இந்நிலையில், சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து 1411 குடியிருப்பு பகுதிகள் உள்பட 95 சதவீதம் நிலப்பரப்பு மீட்கப்பட்டதாகவும், இதற்கான தாக்குதலில் 87 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களை ரஷியப் படையினர் கொன்றதாகவும் ரஷிய ராணுவ மந்திரி செர்கே ஷோய்கு தெரிவித்துள்ளார். #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria 
    மாயமான ரஷிய போர் விமானத்தை சிரியா ராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. #RussianJet #SyriaWar
    மாஸ்கோ :

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

    இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று திங்கள் இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல் போனது. எனவே, இஸ்ரேல் ராணுவத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

    இந்நிலையில், ரஷிய விமானத்தை தவறுதலாக சிரிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு இஸ்ரேல் விமானிகள் ரஷிய விமானங்களை கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளனர். விமானம் வீழ்த்தப்பட்ட லடாக்கியா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அச்சமயம் அந்த பகுதி வழியாக வந்த ரஷிய விமானம் சிரியா ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரஷியா பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளதாவது, ‘தாக்குதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததால் ரஷிய விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இஸ்ரேலிய விமானங்கள் பொறுப்பற்ற செயல்களால் வேண்டுமென்றே அந்த பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 15 வீரர்களின் உடல்களை  தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். #RussianJet #SyriaWar
    அமெரிக்க தேசிய ஆலோசகரின் வருகை இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் முதல் படிக்கட்டாக அமையும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று குறிப்பிட்டுள்ளார். #Putinvoiceshope #TrumpadvisorvisitMoscow
    மாஸ்கோ:

    சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.

    இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அச்சாரமாக அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜான் பால்டோன் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அவரை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள புதின், உங்களது மாஸ்கோ பயணம் நமது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு முழுமையடைவதற்கான முதல் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #Putinvoiceshope #TrumpadvisorvisitMoscow
    சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் உடன் குளோரின் வாயுவும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. #SyriaWar #Sarin #Chlorine

    தி ஹாகூ:

    சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த மார்ச் 24-ம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

    ஹமா மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள லடாம்நேக் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வக சோதனையில் கூறப்பட்டது. 

    அதற்கு அடுத்த நாள் மீண்டும் அதே பகுதியில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் குளோரின் வி‌ஷ வாயு பயன்படுத்தப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. #SyriaWar #Sarin #Chlorine
    சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். #Airstrikeskill
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

    அவ்வகையில், நுஸ்ரா முன்னணி என்னும் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜர்தானா கிராமத்தின்மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில்  44 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலை ரஷியா நாட்டு போர் விமானங்கள் நடத்தியதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    எனினும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #tamilnews #Airstrikeskill 
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிளர்ச்சியாளர்கள் வேகமாக வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syria
    டமஸ்கஸ்:

    சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

    சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

    2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில் மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளான ஹமா மற்றும் ஹோம்ஸை சுற்றியுள்ள ராஸ்டன், டல்பேசேஹ் மற்றும் ஹௌலா பகுதிகள் இன்று அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு கிளர்ச்சியாளர்களால் மூடப்பட்டிருந்த அந்நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையை அரசுப்படைகள் திறந்து வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு மீதம் இருந்த கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

    ஏற்கனவே, சிரிய அரசுடன் கிளர்ச்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். அதில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பகுதியை விட்டு கிளர்சியாளர்களின் குடும்பம் மற்றும் அதிபர் ஆசாத் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத பொதுமக்களும் என சுமார் 1,10,000 பேர் கிளர்ச்சியாளர்களுடன் வெளியேற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த மாதம் தொடக்கம் முதல் 27 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

    அவர்கள் அனைவரும் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துருக்கி மற்றும் ஜோர்டான் எல்லையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டிருந்த பகுதிகளான கிழக்கு அல்லெப்போ பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேரும், கடந்த மாதம் கிழக்கு கவுட்டா பகுதியில் இருந்து 66 ஆயிரம் பேரும் ஏற்கனவே வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கிளர்ச்சியாளர்கள் வெளியேறிவருவதை அடுத்து அங்கு அமைதி திரும்பி வருகிறது. #Syria
    ×